×

தேர்தல் நேரங்களில் மட்டுமே தமிழ் மீது அக்கறை செலுத்துகிறார் பிரதமர் மோடி

நாகப்பட்டினம்,மார்ச்5: தேர்தல் நேரங்களில் மட்டுமே பிரமர் மோடி தமிழ் மீது அக்கறை செலுத்துகிறார் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார். நாகப்பட்டினம் மாவட்டம் திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நாகப்பட்டினம் அருகே புத்தூர் ரவுண்டானா சிஎஸ்ஐ திடலில் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு மீன்வளர்ச்சிக்கழக தலைவர் கவுதமன் தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் மாரிமுத்து வரவேற்றார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:
ஒன்றிய அரசு கொண்டுவந்து திட்டங்களை தமிழக அரசு புறக்கணிப்பதாக பிரதமர் நரேந்திரமோடி கூறி உள்ளார். எந்த திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டது என்பதை அவர் தெரிவிக்க வேண்டும். தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் வணக்கம் தெரிவித்தும், திருக்குறள் வாசித்தும் பேசும் முதல்வர் ஒன்றிய அரசின் ஒரு திட்டங்களுக்கு கூட தமிழ் பெயரிடவில்லை. ஒன்றிய அரசு கொண்டு வந்த திட்டங்களை மொழி தெரியாத மக்களிடையே திணிக்க முயற்சிப்பது வேடிக்கையாக உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு திமுக-காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியின் போது மாநிலங்களில் வாட் வரி விதிப்பு இருந்தது. இதனால் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. ஆனால் பாஜ ஆட்சி அமைந்த பிறகு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரி விதிப்பால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.

வரியை மாற்றங்கள் செய்யும் அதிகாரம் மாநில அரசுகளின் கையில் இருந்தபோது, விலைவாசி உயரவில்லை. தற்போது அந்த அதிகாரத்தை ஜிஎஸ்டி வரி பறித்ததால் விலைவாசி விண்ணை எட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.

கடும் நிதி நெருக்கடியிலும் தமிழக அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தேர்தல் நேரங்களில் மட்டுமே தமிழ் மீது அக்கறை செலுத்துகிறார் பிரதமர் மோடி. இதையெல்லாம் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். தமிழகத்தில் திராவிட மாடல் என்ற சிறப்பான ஆட்சி நடைபெற்று வருவதை அனைவரும் உணவீர்கள். எனவே வரும் லோக்சபாத் தேர்தலில் திமுக சார்பில் யார் வேட்பாளராக நிற்கிறார் என்பது கணக்கு அல்ல. தமிழக முதல்வர் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் வெற்றிபெற செய்வது மட்டுமே நமது இலக்கு.
இவ்வாறு அவர் கூறினார்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது: மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்ற போலி பிம்பத்தை, கருத்து கணிப்பு என்ற போர்வையில் பாஜக அரசு செய்து வருகிறது. தமிழக முதல்வர் இந்தியா கூட்டணியை வலுசேர்க்கும் வகையில் ஒருங்கிணைந்து வருகிறார். மேலும் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களால் பிரதமர் பயத்தில் உள்ளார். இதனால் அமலாக்கத்துறை, வருமானவரித்துறைகள் மூலம் திமுகவை மிரட்டி பார்க்கிறார்கள். இதெல்லாம் ஒருபோதும் எடுபடாது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் அரசு என்பதை மாநில மக்கள் உணர்ந்து விட்டனர். வரும் தேர்தலில் பாஜவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.

கூட்டத்தில் தாட்கோ தலைவர் மதிவாணன், முன்னாள் எம்எல்ஏக்கள் வேதரத்தினம், காமராஜ், மாவட்ட அவைத்தலைவர் செல்வம் மற்றும்பல்வேறு அணி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். நகர துணைச் செயலாளர் சிவா நன்றி கூறினார்.

The post தேர்தல் நேரங்களில் மட்டுமே தமிழ் மீது அக்கறை செலுத்துகிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Nagapattinam ,Minister ,AV ,Velu ,Narendra Modi ,district ,DMK ,Chief Minister ,M.K.Stal ,Tamil Nadu government ,Modi ,Dinakaran ,
× RELATED இந்திய மகள்களின் பாதுகாப்பை விட...